மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: நான்கு மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: நான்கு மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை டிசம்பர் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. 

இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. 

எஸ். ரஜீவன்