மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (29) மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 100.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.7 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விலை 2.559 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
ஈரான் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இந்த பிராந்தியத்தின் ஊடாகவே நடைபெறுகிறது.
தொடர்ச்சியாக நிலவும் இந்த உறுதியற்ற தன்மை காரணமாக, வரும் வாரங்களில் எரிசக்தி விலைகள் மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது உலகளாவிய பணவீக்கத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

