பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொது இடங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்
சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் டெங்கு நோய் பரவும் அதிக அபாயத்தைக் கொண்ட இடங்களாக சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே, இது குறித்து அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களால் இயன்றவரை பங்களிப்பு வழங்கி, அந்த இடங்களை அதிக அபாயகரமான நிலையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஹரகம நகரசபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் கொட்டாவை நகர மத்தியில் இன்று (16) நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“நாங்கள் இன்று ஆரம்பிக்கவிருக்கும் இந்த பணி மிகவும் முக்கியமானது. எமது பிரதேச செயலாளர் கூறியது போல, தற்போது எமது நாட்டில் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதை அனைவரும் அறிவர். குறிப்பாக கொழும்பு மாவட்டம் அதிக அபாய வலயாக சுகாதாரத் துறையினரால் பெயரிடப்பட்டுள்ளது. அவற்றுள்ளும் மஹரகம நகரில் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாக கடந்த வாரம் டெங்கு ஒழிப்புக் குழு கூடியபோது சுகாதாரத் துறையினர் எமக்கு அறிவித்தனர்.
சுகாதாரத் துறையினரின் தரவுகளின்படி, இம்முறை அதிக அபாயமுள்ள இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளவை பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களாகும் என சுகாதார அதிகாரிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி, இந்த வாரத்திற்குள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக விசேட தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்தோம். கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள ‘அதிக அபாய வலயம்’ என்ற முத்திரையை அகற்றுவதே எமது இலக்காகும்.
அதன் மூலம் கொழும்பு மாவட்டத்தையும், மஹரகம நகரையும் குறைந்த அபாயமுள்ள இடங்களாக மாற்றுவோம். அனைவரும் ஒன்றிணைந்தால் எம்மால் இதனைச் செய்ய முடியும் என நான் நினைக்கிறேன். இது ஒரு வாரத்திற்கான வேலை மாத்திரமல்ல. இந்த காலம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய ஒன்று. இந்த வாரத்தை ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையாக மாற்றியுள்ளோம். நாடு முழுவதும் இதனைச் செய்கிறோம். எனவே, இந்த வாரத்தை விசேடமாகக் கொண்டு, இக்காலப்பகுதி முழுவதும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், சுற்றுச்சூழல் பொலிஸாரையும் இதற்காகச் செயற்படுத்துவோம். பொலிஸாரின் ஆதரவுடன் இதனைச் சரியாகச் செய்வோம்.” என்றார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரதமர் கொட்டாவை பேருந்து நிலையத்தையும் பார்வையிட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும் (16).
இன்றைய தினமும் அரசியல் பிரதிநிதிகள், சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் பங்களிப்புடன் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு இணையாக, டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஒரு வாரத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாது தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

