போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கில் ஐவருக்குப் பிணை
மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கில் ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை நகருக்குள் கொண்டு வர வேண்டாம் எனப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராடியவர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே, வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஐந்து நபர்களுக்கு எதிராகவும் மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அறுவர் அடங்குவர்.
இவர்கள் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அவர்களுக்குத் துணையாக ஏனைய சட்டத்தரணிகளும் ஆதரவு அளித்தனர். விசாரணையின்போது, ஐந்து சந்தேக நபர்களையும் தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கில் ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

