நேபாள வெள்ளத்தின் உயிரிழப்பு 165 ஆக உயர்வு!
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 165 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேரிடரைத் தொடர்ந்து உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திடீர் வெள்ளத்தில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
நேபாள பொலிஸார் நேற்று (25) இரவு வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, சீன அதிகாரிகள் திபெத்தின் கியிரோங் (Gyirong) மாவட்டத்தில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கியிரோங் பகுதி அதிகாரிகள், இந்த பேரிடரில் மேலும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

