நுவரெலியாவில் போதிய பேருந்து வசதியின்றி பயணிகள் அவதி
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களுக்குத் திரும்புவதற்காக இன்று (18) நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்றுவரை முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
இதனால், புகையிரதத்தை நம்பியிருந்த பயணிகளும் பேருந்து சேவையையே நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும், நுவரெலியா பேருந்து நிலையத்தில் போதுமான அளவு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை எனப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நுவரெலியாவில் வசந்த காலம் கொண்டாடப்படுவதால், வெளி மாகாணங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பேருந்து சேவையைப் பயன்படுத்தி வருகை தருவது வழக்கமாகும்.
இவ்வாறு பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்று தெரிந்திருந்தும், அதிகாரிகள் போதிய பேருந்து வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டுத் திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்திருந்த போதிலும், நுவரெலியாவிலிருந்து நீண்ட தூர இடங்களுக்கான பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

