நுவரெலியாவிற்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்ட பிரதான சந்தேக நபர்

நுவரெலியாவிற்கு நள்ளிரவு கொண்டு வரப்பட்ட பிரதான சந்தேக நபர் தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் மரணம் தொடர்பான விசாரணையில், யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அவரது மனைவி ,பிள்ளைகள் மற்றும் பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.
மேலும் பிரதான சந்தேக நபர் பயன்படுத்திய கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் நுவரெலியா பொலிஸார் மீட்டு காவலில் எடுத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் போது யாழ்ப்பாணம் சென்று கடல் மார்க்கமாக இந்தியா நோக்கி பயணிக்க இருந்ததாக யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பாசிரியர் தெரிவித்தார்.
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் சாவகச்சேரிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கைத்தடிப் பகுதியில் சொகுசு பேருந்து ஒன்றில் தம்பதியினர் பயணிப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், வலான ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் நடத்திய கூட்டுத் தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முஸ்லிம் பெண் வேடம். கைது செய்யப்படும் போது பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகப் பிரதான சந்தேகநபர் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்ததோடு, கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சரணடையவிருந்ததாக வாக்குமூலம்:-கைதான சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, தாம் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தங்களது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த வெற்றிகரமான கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விபரங்கள் மற்றும் தீவிர விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

