நீர்வெட்டு நேரம் குறைப்பு
பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை (5) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரம் 8 முதல் 12 மணித்தியாலங்களால் குறைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வறட்சியான வானிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள தடையைக் கருத்திற்கொண்டு பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு நாள் முழுவதும் நீர் விநியோகத்தைத் துண்டிக்க நீர் வழங்கல் சபை தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தைத் தடை செய்வதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, அந்த காலப்பகுதியை 18 மணித்தியாலங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர் வழங்கல் சபை நேற்று அறிவித்தது. அத்துடன், இந்த நேரத்தை மேலும் குறைக் சபை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நீர் விநியோகத்திற்குத் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டால், பவுசர்கள் மூலம் நீரை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய, ஏனைய மாவட்டங்களில் உள்ள நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான பவுசர்களை கொழும்புக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார குறிப்பிட்டார்.
நீர் விநியோகத் தடையால் தற்போது சுமார் 20,000 நீர் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

