நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால் இந்த சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். 

நேற்று (11) மீகஹகிவுல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இது குறித்து மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார். 

குறித்த பகுதிகளில் நிலவும் ஆபத்து நிலையைக் கருத்திற்கொண்டு, வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய, 5 மாவட்டங்களின் 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட (Level 2) ‘அவதானம்’ எச்சரிக்கையும் அவ்வாறே செயற்படுத்தப்படும். 

இதற்கு மேலதிகமாக, 3 மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) ‘விழிப்புடன் இருங்கள்’ என விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். 

கிடைக்கும் மழைவீழ்ச்சியுடன் இந்த அறிவிப்புகள் மாறக்கூடும் என்பதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இது குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருக்க வேண்டும். 

எஸ். ரஜீவன்