தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 

திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதிமுக 3ம் இடத்திற்கும், நாம் தமிழர் கட்சி 4ம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதிமுக படுதோல்வியை தழுவிய நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. 

இதனால், அ.தி.மு.க, எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். 

தற்போது விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்துள்ளதால் விராலிமலை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதன்மூலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இராஜினாமா, விஜய் வெற்றி பெற்று இராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்படாத நிலையில், இடைத்தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் காலியாக உள்ள 6 தொகுதிகளில் நான் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டுமென்பது நாதகவினரின் விருப்பம். 

பிற கட்சியினரின் விருப்பமும் இதுவாக இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனையில் அம்பாசமுத்திரம் உகந்ததாக இருக்குமென்று முடிவு செய்து போட்டியிடயிருக்கிறேன். 

மற்ற தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றார். இதன்மூலம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

manel