டிப்பர் வாகனம் மோதிப் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை

டிப்பர் வாகனம் மோதிப் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை

கேகாலை – ரந்தெனிய பகுதியில் அமைந்திருந்ததும், முன்னர் ‘வரகாகொட யானை’ என அழைக்கப்பட்ட ‘ரந்தெனிய பண்டார’ என்ற யானை வீதி விபத்தொன்றில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவச் சிகிச்சைப் பெற்று வருகிறது.

குருநாகல் – மெல்சிர்புர வீதியின் ஓமரகொல்ல பகுதியில் வீதியைக் கடக்க முயன்றபோதே, அதிவேகமாகவும் பொறுப்பற்ற முறையிலும் செலுத்தப்பட்ட டிப்பர் லொறி ஒன்று மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.

லொறி மோதிய பலத்த மோதலினால் யானை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்ர்கள், யானையின் நிலையைச் சீராக்குவதற்காக முதற்கட்டத் தீவிர சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளனர்.

கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து இந்த யானை மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யானையைக் கொண்டு சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, யானையை அந்த வாகனத்தில் இருந்து இறக்கி வீதியோரத்தில் நிறுத்த முற்பட்ட வேளையில், தம்புள்ளையில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து நேரிட்டுள்ளது.

டிப்பர் வாகனத்தில் மோதிய யானை சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த யானை விபத்தில் காயமடைந்த சம்பவம் சுற்றாடல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், யானை விரைவில் குணமடையப் பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து வீதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சாரதிகள் அதிக கவனத்துடனும் பொறுப்புடனும் வாகனங்களைச் செலுத்த வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

manel