டிசம்பரில் இலங்கையர் தின நிகழ்ச்சி- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும். என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் மாபியாக்களிடமிருந்து விடுபட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (12) நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது மக்களுக்கான வரவுசெலவுத் திட்டமாகும். நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு பகுதிக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை. வடக்கு,கிழக்கு மக்களும் வரவேற்றுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது.
கார்த்திகை மாதமென்பது முக்கியமான மாதம். மாவீரர்களை நினைவு கூருகின்ற மாதம். அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் தமது பிள்ளைகளை நினைவு கூருகின்ற மாதமாகும். அந்த மாதத்தில் இருந்து கொண்டு நாம் கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.
தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் போராடிய இளைஞர்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்களின் அபிலாசைகள் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமது மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட அவர்கள் போராடி இருந்தால், அந்த கனவை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாட்டை எந்தவொரு தமிழ்க் கட்சியாவது, அரசியல்வாதியானது முன்னெடுக்கின்றனரா? இல்லை. அது கேள்விக்குறியாகவே உள்ளது

