சிலிச்சை வீழ்த்தினார் இளம் வீரர் மொய்ஸ் குவாமே
பிரெஞ்ச் ஓபனில் யு.எஸ் ஓபனின் முன்னாள் சம்பியனான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடிய பிரான்ஸின் இளம் வீரர் மொய்ஸ் குவாமே, 7-6(4), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, கிராண்ட்ஸ்லாம் மேடையில் புதிய சாதனையைப்பதிவுசெய்தார். 17 ஆண்டுகளில் ஒரு முக்கிய பிரதான சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மிக இளைய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
வைல்டு கார்டு வழங்கப்பட்ட 17 வயதான அந்த பிரெஞ்சு வீரர், தன்னை விட 20 வயது மூத்தவரும், முன்னாள் உலகத் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்தவருமான ஒரு வீரருக்கு எதிராக தனது கிராண்ட்ஸ்லாம் அறிமுகப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், சைமன் மாத்யூ மைதானத்தில் சற்றும் கலங்காமல் காணப்பட்டார்.
2014 யுஎஸ் ஓபன் சம்பியனும், 2022 ரோலண்ட் கரோஸ் அரையிறுதிப் போட்டியாளருமான சிலிச், உலகத் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கிறார். தரவரிசையில் 318 ஆவது இடத்தில் இருக்கும் அச்சமற்ற அந்த இளம் வீரரிடம் அவர் தோல்வியடைந்தார்.
போட்டி முழுவதும் ஒரு சர்வீஸ் பிரேக்கைக்கூட விட்டுக்கொடுக்காமல், கோவாமே நேர் செட்களில் வெற்றியை உறுதி செய்தார்.
17 வயது இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவுஸ்திரேலியாவின் பெர்னார்ட் டோமிக் 16 வயதில் 2009 அவுஸ்திரேலிய ஓபனின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியதற்குப் பிறகு, ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியை வென்ற மிக இளைய வீரர் என்ற பெருமையை கோவாமே பெற்றார்.
1991-ஆம் ஆண்டு, 17 வயது ஒரு மாதத்தில் ருமேனியாவின் டினு பெஸ்காரியு இந்தச் சாதனையை நிகழ்த்திய பிறகு, ரோலண்ட் கேரோஸில் முதல் சுற்றைத் தாண்டி முன்னேறிய மிக இளைய வீரர் இவரே ஆவார்.
முன்னாள் பிரெஞ்சு வீரர் ரிச்சர்ட் காஸ்கெட்டின் பயிற்சியில் உள்ள மொய்ஸ் குவாமே , கடந்த மார்ச் மாதம் மியாமி மாஸ்டர்ஸில் தனது முதல் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது தொழில் வாழ்க்கையில் இரண்டாவது பிரதான சுற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

