சர்வதேச நாணய நிதியத்தின் 6ஆவது தவணை விரைவில்
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 6வது கட்ட கடன் தொகையானது அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்கும் என அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, 6 வது கடன் தவணையான 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக இராஜதந்திர தூதுக்குழுக்கள், இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

