சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கு ஒன்லைன் முன்பதிவு ஆரம்பம்

சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கு ஒன்லைன் முன்பதிவு ஆரம்பம்

மண்டல, மகரவிளக்கு பருவத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் திகதி திறக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது. கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27ஆம் திகதி நடக்கிறது. 

இந்நிலையில் வரும் 26 மற்றும் 27-ம் திகதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஒன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது. 

இதன்படி sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும், டிச. 26ம் திகதி 30 ஆயிரம் பேருக்கும், 27-ம் திகதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பாட் புக்கிங்கில் தலா 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மண்டல பூஜையின்போது, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

சபரிமலையில் 27ஆம் திகதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி தங்க அங்கி 23ஆம் திகதி காலை 7.00 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்படுகிறது. 

எஸ். ரஜீவன்