கொழும்பு தாருஸ்ஸலாம் கல்லூரியின் 110-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் முத்திரை வெளியீடு
கொழும்பு 10 மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி தனது கல்விப் பயணத்தில் 110 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு, விசேட ஞாபகார்த்த முத்திரை வெளியீடு மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விப் பொருட்காட்சி ஆகிய நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.எம். அஹமட் நிப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் P.R. தேவபந்து அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
“அறிவையும் பாரம்பரியத்தையும் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், கல்லூரியின் நூறாண்டு கால கல்விப் பணிகளை கௌரவிக்கும் வகையில் விசேட ஞாபகார்த்த அஞ்சல் முத்திரை மற்றும் முதன்நாள் உறை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கல்விப் புலமையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விசேட கண்காட்சியினை அதிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்த இக்கண்காட்சி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். 110 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்ட தாருஸ்ஸலாம் கல்லூரி, கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் ஆற்றிவரும் மகத்தான சேவையை நினைவுபடுத்தும் வகையில் இந்த மைல்கல் நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








