கொழும்பில் பிரமாண்டமாக நடைபாபெற்ற சர்வதேச யோகா தினம்
ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற உன்னதக் கருப்பொருளை மையமாகக் கொண்டு, 12வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் இலங்கையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இதன் முக்கிய பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் வழிகாட்டலின் ஊடாக கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (21) மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.நல்வாழ்வு, மன அமைதி மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் அரச உயர் அதிகாரிகள் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர மற்றும் தேசிய மக்கள் சக்தி வட கொழும்பு அமைப்பாளர் திரு. சிவானந்தராஜா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வை சிறப்பித்தனர்.உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த யோகா ஆர்வலர்கள், பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒற்றுமையையும் நல்வாழ்வையும் வெளிப்படுத்தினர்.இவர்களுடன் இணைந்து இலங்கை முப்படைகளின் அதிகாரிகள், இலங்கை காவல்துறை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் மிக ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வின் போது சிறந்த யோகா அறிமுகமும் கூட்டுப் பயிற்சியும் நடைபெற்றது. இலங்கை முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த 100க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த யோகா பயிற்றுநர்கள், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு யோகாசனப் பயிற்சிகளை மிகத் தெளிவாகச் செய்து காண்பித்து வழிகாட்டினர்.இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய கலாச்சார உறவுகள் சபை (ICCR), ஆயுஷ் அமைச்சு மற்றும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி அமைப்புகளின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.யோகா மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் செய்தியை வலியுறுத்திய இந்நிகழ்வானது, இந்தியா – இலங்கை மக்களுக்கிடையேயான கலாச்சார மற்றும் ஆரோக்கிய ரீதியிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

