கொட்டகலையில் இடம்பெற்ற சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!
நுவரெலியா மாவட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றம், சுயதொழில் முயற்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சுய சக்தி நிறுவனம் ஏற்பாடு செய்த இலவச சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (16.08.2026) காலை 9.00 மணிக்கு சுய சக்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுய சக்தி நிறுவனத்தின் இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொழில் முயற்சியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள விடயங்களை அறிந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கில் சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான அடிப்படை தேவைகள், தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணுதல், தமக்குள்ள திறமைகளை தொழிலாக மாற்றுதல் மற்றும் சிறு தொழில்களை வளர்த்தெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, காளான் வளர்ப்பு தொடர்பாகவும் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், காளான் வளர்ப்பை சுயதொழிலாக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன்மூலம் வருமானத்தை உருவாக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், விவசாயம், கைத்தொழில், சேவைத் துறை, சிறு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், தொழிலைத் திட்டமிடுதல், சந்தைப்படுத்தல், நிதி உதவிகள் மற்றும் தொழிலை நிலையான முறையில் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு
இக் கருத்தரங்கில் மற்றுமொரு முக்கிய அம்சமாக மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டது.
சந்தார திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
அத்துடன், சுய சக்தி நிறுவனத்தின் “சந்தார” திட்டம் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
சந்தார திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள், குறிப்பாக ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை ஊக்குவித்தல், வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பாரம்பரிய தயாரிப்புகளை மலையக மக்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்துடன், சுயதொழில், காளான் வளர்ப்பு, மனித உரிமைகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.
“தொழில் தொடங்கும் உங்கள் கனவை நனவாக்க – இன்று முதல் தொடங்குங்கள்!” என்ற ஊக்கச் செய்தியுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.

