கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரா பீடத்தின் 8வது வருடாந்த ஆய்வு மாநாடு
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடாத்தும் 8வது வருடாந்த ஆய்வு மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஸ் சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இந்த ஆய்வு மாநாட்டின் ஆதார சுருதி உரையினை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரோ வழங்கவுள்ளார்.
மாநாட்டின் ஆரம்ப வைபவம் நல்லையா மண்டபத்தில் மு.ப. 9.00 தொடக்கம் மு.ப. 11.00 வரை நடைபெறும். இதனையடுத்து கலை கலாசார பீடத்தின் ஆங்கில மொழிக் கற்கைகள் துறையின் முதலாவது அமர்வு மு.ப. 11:00 தொடக்கம் பி.ப. 1.00 வரையும், இரண்டாவது அமர்வு பி.ப. 2:00 தொடக்கம் பி.ப. 3:30 வரை இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்த ஆய்வாளர்களின் அமர்வில், ஆய்வுக் கட்டுரைகளின் முன்வைப்புகள் இடம்பெறவுள்ளன.
‘புவியியலும் சூழலியலும்’, ‘சமூகவியலும் மானுடவியலும்’, ‘பன்மைத்துவச் சமூகங்களின் அடையாளங்களும் சமூக நல்லிணக்கமும’, ‘இலக்கியமும் சமூகமும’, ‘கல்வியும் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளும’, ‘அரசியலும் மனித உரிமைகளும’, ‘கலையாற்றுகைகளும் அதன் கட்டுருவாக்கங்களும்’, ‘சமயங்களும் அறமும்’, ‘வரலாறும் வாய்மொழி மரபுகளும’, ‘உளநலமும் பெண்கள் கற்கையும் என்ற பத்துத் தலைப்புகளின் கீழ் மொத்தம் 62 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதனையடுத்து பி.ப. 4:00 மணியளவில் 8வது ஆய்வு மாநாட்டின் நிறைவு விழா நல்லையா மண்டபத்தில் நடைபெறும் இதில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த ஆய்வாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த 8வது ஆய்வு மாநாட்டின் இணைப்பாளராக கலைகலாசார பீடத்தின் பேராசிரியர் ந.புஸ்பராசா செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

