கிரிகரி ஏரியின் ‘பயங்கர படகு விபத்து’ தொடர்பில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு!

கிரிகரி ஏரியின் ‘பயங்கர படகு விபத்து’ தொடர்பில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு!

கடந்த 16ஆம் திகதி நுவரெலியா கிரிகரி ஏரியில் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் பயணித்த ஜெட் ஸ்கீ படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களாக வெளியான சில ஊடகச் செய்திகளில் காணப்பட்ட விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில், குறித்த படகை செலுத்திய கசுன் லக்மால் மற்றும் கிரிகரி ஏரியில் இயங்கும் படகு சங்கங்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (19) முற்பகல் கிரிகரி ஏரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சம்பவத்துடன் தொடர்புடைய படகோட்டி கசுன் லக்மால், தாம் படகை பாதுகாப்பற்ற முறையில் கவிழ்க்கவில்லை எனவும், படகின் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியானதைத் தொடர்ந்து இரு சிறுவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கு அமைவாக பாதுகாப்பு நடவடிக்கையாகவே படகை கவிழ்த்ததாகவும் தெரிவித்தார்.

படகோட்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது உயிர் பாதுகாப்பு, முதலுதவி, படகு இயக்கம் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் பயிற்சி வழங்கப்படுவதாகவும், அவசர நிலைமைகளின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தப் பயிற்சியின்போது அறிவுறுத்தப்படுவதாகவும் கசுன் லக்மால் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கிரிகரி ஏரி படகு சங்கங்களின் ஒன்றியத்தின் சார்பில் கருத்து தெரிவித்த சதுரங்க சந்தருவன், ஜெட் ஸ்கீ என்றால் என்ன என்பதையும், நீர்விளையாட்டின்போது இடம்பெறக்கூடிய வழமையான நடவடிக்கைகள் குறித்தும் உரிய புரிதல் இல்லாமல் சில ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 16ஆம் திகதி இரு சிறுவர்கள் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஜெட் ஸ்கீ படகு கவிழ்ந்த சம்பவத்தை சில ஊடகங்கள் பாரிய விபத்தாக சித்தரித்திருப்பது சரியானதல்ல எனவும், சம்பவத்தின் உண்மைத் தன்மையையும் அச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலைமையையும் உரிய முறையில் அடையாளம் கண்டு செய்தி வெளியிடுவது ஊடகங்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலைமையை ஆராயாமல் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், நீர்விளையாட்டுகள் தொடர்பில் தவறான புரிதலும் ஏற்படக்கூடும் எனவும் சதுரங்க சந்தருவன் குறிப்பிட்டார்.

கிரிகரி ஏரியில் படகுகளை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் அனைத்து படகோட்டிகளும் உரிய அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்க வேண்டும் எனவும், உயிர் பாதுகாப்பு, முதலுதவி, படகு தொழில்நுட்பம் மற்றும் அவசரநிலைமைகளின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், உரிய பயிற்சியும் அனுமதியும் இல்லாத நபர்களுக்கு கிரிகரி ஏரியில் படகுகளை செலுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், படகு இயக்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இயக்கப்படும் படகுகளுக்கும் அவற்றில் பயணிக்கும் நபர்களுக்கும் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் இருந்த சிறுவர்களின் தந்தைக்கு சம்பவம் தொடர்பில் தெரியவருவதற்கு முன்னரே, படகு கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகில் சேவையில் ஈடுபட்டிருந்த ஏனைய படகுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் சதுரங்க சந்தருவன் தெரிவித்தார்.

படகு சங்கங்களின் பிரதிநிதிகளும் உயிர்காப்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இரு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டு மற்றுமொரு படகில் ஏற்றிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வந்த புகைப்படங்கள் தொடர்பிலும் சதுரங்க சந்தருவன் விமர்சனம் முன்வைத்தார்.

அந்தப் புகைப்படங்களில் சம்பவத்துடன் தொடர்பில்லாத புகைப்படங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களும் காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான புகைப்படங்களைப் பயன்படுத்தி சம்பவத்தை மேலும் பாரதூரமானதாக பொதுமக்களுக்கு காண்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவத்தை பாரிய விபத்தாக சித்தரிப்பதற்குப் பின்னால் வேறு நோக்கங்கள் இருக்கக்கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

குறிப்பாக, கிரிகரி ஏரிக்குள் புதிய படகுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கும் சில தரப்பினரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக இச்சம்பவம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமான உறுதிப்படுத்தல் எதுவும் இடம்பெறவில்லை.

முழுச் சம்பவம் தொடர்பிலும் கருத்து தெரிவித்த சதுரங்க சந்தருவன், தங்களிடம் உள்ள அறிவும் பயிற்சியும் அடிப்படையில், இது உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய பாரிய விபத்தாக கருதப்பட வேண்டிய சம்பவம் அல்ல எனவும், மாறாக அவசர நிலைமையொன்றில் உயிர்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இதனை கருத வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

படகை இயக்கிக்கொண்டிருக்கும்போது எஞ்சினில் இருந்து புகை வெளியேறினால், உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக படகை கவிழ்ப்பது தொடர்பான பயிற்சி படகோட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பயிற்சிக்கு அமைவாக கசுன் லக்மால் செயற்பட்டமை தொடர்பில் படகு சங்கங்களின் ஒன்றியம் திருப்தியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த படகோட்டி கசுன் லக்மாலுக்கு, படகு சங்கங்களின் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சதுரங்க சந்தருவன் மேலும் குறிப்பிட்டார்.

manel