கலை ஸ்ரீ கலா மன்றத்தின் ஏற்பாட்டில் கோலாகல விழா!
அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும் கலைஶ்ரீ கலை மன்றமும் இணைந்து நடத்திய “பாடுவோர் பாடலாம், ஆடுவோர் ஆடலாம்” எனும் கலை நிகழ்வும், சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு 11 – பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கொழும்பு பிரதேச உப செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கவி பில்ம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர்ஸின் தலைவர் “சங்கவி சுரேஷ்” அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இவருடன் கௌரவ அதிதியாக கலாபூஷணம், இலங்கை பொன்மனச் செம்மல் எம்.எஸ். தாஜ்மஹான் கலந்துகொண்டதுடன், கொழும்பு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ரோஸ் மேரி அவர்கள் முன்னிலை வகித்தார்.
அரங்கம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் இச் சிறப்பான கலை விழா அரங்கேறியது.
இலங்கையின் பிரபல சிரேஷ்ட கலைஞரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஜோசப் பெர்ணாண்டோ அவர்களுக்கு இந்நிகழ்வில் பொன்னாடை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களினால் ஆடல், பாடல் மற்றும் மேடை நாடகங்கள் எனப் பல கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,
ஊடகங்களின் வாயிலாக கலைத்துறைக்கு பாரிய பங்காற்றிய ஊடகவியலாளர்களும் இதன்போது விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.
கலைத்துறையை மங்க விடாமல் தொடர்ந்து “பாடுவோர் பாடலாம், ஆடுவோர் ஆடலாம்” எனும் இந்தத் தொடர் நிகழ்வினை முன்னெடுத்து வரும் கலைஞர் “கலைஸ்ரீ – ஸ்ரீபாலனின்” அயராத கலைப் பணிக்கு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இதன்போது மனமார்ந்து தெரிவித்தனர்.

















