கபில சந்திரசேனவின் சட்டத்தரணிகளை சாட்சியத்திற்கு அழைப்பதா? இல்லையா?
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான மரண விசாரணை சாட்சியத்திற்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோரை சாட்சியத்திற்கு அழைப்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவை ஜூன் மாதம் 2ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கபில சந்திரசேனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் சட்டத்தரணிகளாக முன்னிலைப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தேஜித கோரலகே நீதிமன்றத்தில் விளக்குகையில், நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்காத போதிலும், ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது கனிஸ்ட சட்டத்தரணியும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 370(5) பிரிவின் கீழ் ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது கனிஸ்ட சட்டத்தரணியும் இந்த மரண விசாரணையில் சாட்சியமளிப்பது அவசியமா என்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சான்றியல் கட்டளைச் சட்டத்தின் 126ஆவது பிரிவு மற்றும் உயர் நீதிமன்ற விதிகளின் 30 முதல் 34 வரையிலான விதிகளின்படி, ஒரு சட்டத்தரணி தனது வாடிக்கையாளருடன் மேற்கொள்ளும் ஆலோசனை விடயங்கள் தொடர்பான இரகசியத்தன்மையைப் பேணக் கடமைப்பட்டுள்ளார். அது ஒரு சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
இந்த மரண விசாரணையில் இறப்பவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதே நோக்கமாக உள்ளது. எனவே, ஒரு சட்டத்தரணிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே பரிமாறப்பட்ட கருத்துக்கள் இந்த விடயத்தைக் கண்டறிவதற்கு எந்தளவிற்கு பொருத்தமானவை என்பதை பரிசீலிக்குமாறு நான் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கிறது. எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 370(5) பிரிவின் கீழ் இந்த ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணியின் சாட்சியங்களை அழைப்பது அவசியமா என்பதை தீர்மானிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் நீதவான், பொலிஸாரிடம் இந்த ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணியிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அந்த வாக்குமூலங்களை பதிவு செய்ய முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
அதன் பின்னர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எழுப்பிய விடயங்கள் குறித்து காரணிகளை முன்வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அதற்கு பதிலளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கூறியதாவது,
“2026ஆம் ஆண்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கு தலா 100 இலட்சம் ரூபா வீதம் 3 சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டன. பின்னர் பிணையாளர்களை ஆஜர்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக அவரால் பிணை பெற முடியாமல் போனது.
அதன் பின்னர் பிணையாளர்களை ஆஜர்படுத்தி அவர் மே மாதம் 6ஆம் திகதி சிறையிலிருந்து விடுதலையானார். பின்னர் மே மாதம் 7ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் கபில சந்திரசேனவிற்கு மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அன்று மாலை அரவிந்த டி சில்வா மாவத்தையில் உள்ள வீட்டிற்கு ஒரு குழுவினர் வந்துள்ளனர். அக்குழுவினர் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவ்விடத்தில் வைத்து அரவிந்த டி சில்வாவின் மனைவியின் கைபேசி மூலம் ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? என்பதைக் கண்டறிவதற்காகவே அந்த சட்டத்தரணிகள் சாட்சியத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இருதரப்பு காரணிகளையும் பரிசீலித்த நீதவான், குறித்த இரண்டு சட்டத்தரணிகளையும் சாட்சியத்திற்கு அழைப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு ஜூன் மாதம் 02ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

