உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. 

இது எதிர்காலத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் உபரி நிலை ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மத்திய கிழக்கில் எதிர்பாராத விநியோகத் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்  பீப்பாய் ஒன்றின் விலை 3.21 டொலர்கள் அல்லது 3.5 சதவீதம் அதிகரித்து 94.61 டொலர்களாகப் பதிவானதுடன், அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.63 டொலர்கள் அல்லது 2 சதவீதம் அதிகரித்து 83.68 டொலர்களாக உயர்ந்துள்ளது.

இவ்விரு கச்சா எண்ணெய் வகைகளும் செவ்வாய்க்கிழமையும் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்திருந்தன. 

சவூதி அரேபியாவின் ரஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரியாத்தின் நிதி மாவட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். 

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான இது, சவூதி மசகு எண்ணெய்யின் பிரதான ஏற்றுமதி முனையமாகச் செயற்படும் ஒரு வளாகத்தின் பகுதியாகும். 

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அபாயங்களைச் சுட்டிக்காட்டிய பி.வி.எம் (PVM) எண்ணெய் ஆய்வாளர் தாமஸ் வர்கா, ஹூதிகளின் இந்த அறிவிப்பே புதன்கிழமை விலை உயர்வுக்குத் தூண்டுதலாக அமைந்ததாகத் தெரிவித்தார். 

அத்துடன், அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் (Thanksgiving) விடுமுறைக்கு முன்னதாக வர்த்தகர்கள் தமது விற்பனை நிலைகளை ஈடுசெய்தமையும் (covering short positions) இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். வார இறுதியை முன்னிட்டு நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் குறித்து முதலீட்டாளர்கள் பதற்றமடைந்துள்ளதாக ‘பிரைஸ் பியூச்சர்ஸ் குரூப்’ (Price Futures Group) நிறுவனத்தின் ஆய்வாளர் பில் பிளின் தெரிவித்துள்ளார். 

manel