அட்டனில் தீபாவளிக்கு நடைபாதை வியாபாரம் தடை

அட்டனில் தீபாவளிக்கு நடைபாதை வியாபாரம் தடை

தீபாவளி பண்டிகைக் காலத்திற்காக ஹட்டன் டிக்கோயா நகர சபையில் வணிக நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட 146 நிலத் துண்டுகளை டெண்டர் செய்ததன் மூலம் ஹட்டன் டிக்கோயா நகர சபை ரூ. 36 இலட்சத்திற்கும் அதிகமான (ரூ. 36,68,000) வருமானத்தை ஈட்டியுள்ளது.

குறித்த டெண்டர் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் நகரில் நடைபாதைகளில் வர்த்தகம் அனுமதிக்கப்படாத நிலையில், ஹட்டன் நட்சத்திர சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் வணிக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அறிக்கை அடிப்படையில் இந்த நிலத் துண்டுகளுக்கான டெண்டர்கள் கோரப்பட்டன.

நிதிக் குழு உறுப்பினர்களின் மேற்பார்வையில், மாநகர சபையின் செயலாளர் ஷியாமலி ரூபசிங்க நேற்று டெண்டர்களைத் திறந்து இந்த வருமானத்தை பெற்றார்.

இந்த டெண்டர்கள் மூலம் நிலங்களை பெற்றவர்களிடமிருந்து டெண்டர் தொகைக்கு மேலாக குப்பை வரி மற்றும் வணிக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர சபையால் வழங்கப்பட்ட அளவுகோல்களின் படி வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.

எஸ். ரஜீவன்

Related Posts