ஹாலிஎல – பதுளை வீதி அபிவிருத்திக்கு ரூ.600 மில்லியன் ஒதுக்கீடு
பேராதனை – பதுளை – செங்கலடி பிரதான வீதியின் ஹாலிஎல முதல் பதுளை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக சுமார் ரூ.600 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வீதி அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (12) ஹாலிஎல நகரிலிருந்து பதுளை வரையிலான வீதிப் பகுதியை கண்காணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வழமையான முறையில் வீதியின் சேதமடைந்த பகுதிகளை மாத்திரம் திருத்துவதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையிலும் நகரங்களின் அழகை மேம்படுத்தும் வகையிலும் குறித்த வீதிப் பகுதியை முழுமையாக நவீனமயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகளவில் வாகன விபத்துகள் இடம்பெறும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடைபாதைகள், பாதசாரிகளுக்கான தனிப்பாதைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், எல்ல பிரதேசத்திலிருந்து பதுளை ஊடாக பயணிக்கும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், வீதியையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் அழகுபடுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹாலிஎல மற்றும் பதுளை ஆகிய இரு நகரங்களுக்கும் சமமான பயன்கள் கிடைக்கும் வகையில் நகர அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வீதிப் பகுதியை கவர்ச்சிகரமான முறையில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

