ஹட்டன் – கொழும்பு வீதியில் பேருந்து மீது பாறை வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

ஹட்டன் – கொழும்பு வீதியில் பேருந்து மீது பாறை வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மலை உச்சியிலிருந்து பாரிய பாறையொன்று சரிந்து வீழ்ந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (28) பிற்பகல் 2.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை, கலுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பேருந்து மீது பாறை சரிந்து வீழ்ந்ததில், இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, பொல்பிட்டிய மற்றும் கலுகல காவல்துறை அதிகாரிகள், பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகளுடன் இணைந்து காயமடைந்தவரை கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அகரபத்தனைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முத்தன் சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் ஹட்டன் பேருந்து சாலைக்குச் சொந்தமான பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளது.

நேற்று (27) பொல்பிட்டிய பகுதியில் பெய்த கடும் மழை காரணமாகவே மலை உச்சியிலிருந்து பாறை சரிந்து வீழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

manel