ரூபா. 30 மில்லியன் செலவில் மாகாண ஆயுர்வேத மருந்துக்களஞ்சியம்!
கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத மருந்து விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் புதிய மருந்துக்களஞ்சிய வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் நிலையங்களுக்குத் தேவையான மருந்துகளை தடையின்றி வழங்குவதற்காக, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் புதிய ‘கிழக்கு மாகாண மருந்துக்களஞ்சிய வளாகம்’ (Eastern Provincial Drug Warehouse Complex) அமைக்கப்படவுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு விழா கடந்த 18 ஆம் திகதி கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
மாகாண விசேட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் (PSDG 2026) இதற்கென 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய களஞ்சிய வளாகம், ஸ்ரீலங்கா ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் (Sri Lanka Ayurvedic Pharmaceuticals Corporation) மாகாணத்திற்கு வழங்கப்படும் ஆயுர்வேத மருந்துகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, கிழக்கு மாகாணம் முழுவதற்கும் திறம்பட விநியோகிக்கும் பிரதான மத்திய நிலையமாகச் செயற்படவுள்ளது.
இந்நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள், ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்கான ஆயுர்வேத மருத்துவச் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

