மீகொடை தன்சல் விபத்து – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
மீகொடை சந்தியில் உள்ள தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (06) அவர்கள் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) நிகழ்ந்த இந்த கோர வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்திருந்தனர்.
விபத்தின் பின்னர் தப்பியோடி தலைமறைவாகியிருந்த கெப் வாகனத்தின் உரிமையாளரும், விபத்து நடந்த நேரத்தில் அதில் பயணித்த மற்றைய நபரும் இன்று (06) மீகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். விபத்து நடந்து 6 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோடிய சந்தேகநபரான ஓட்டுநரை பொலிஸார் பின்தொடர்ந்து சென்று கொடகம பகுதியில் வைத்து ஏற்கனவே கைது செய்திருந்தனர். கைது செய்யப்படும் போது அவர் அதிக மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் வேளையில், அவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மனிதப்படுகொலை செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், விபத்தைத் தவிர்க்கத் தவறுதல் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அன்றைய தினமே ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய உத்தரவிட்டிருந்தார்.
விபத்து நடந்த தருணத்தில் கெப் வாகனத்தில் மேலும் சிலர் இருந்ததாகவும், விபத்தின் பின்னர் அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோடியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அதன்படி, தப்பியோடியவர்கள் பல நாட்களாக பொலிஸாரிடம் சிக்காமல் மறைந்திருந்ததால், அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு நேற்றைய தினம் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்தனர்.
அதன் அடிப்படையில், அந்த கெப் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியைச் சேர்ந்த அத்தநாயக்ககே தொன் வசந்த என பொலிஸார் அடையாளம் கண்டிருந்தனர். இவரைத் தவிர, பெலன்வத்தையைச் சேர்ந்த எஸ்.கே. குமார் எனப்படும் செல்லமுத்து செல்லக்குமார் மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த தொன் சரத் ஹெட்டிகே ஆகியோரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டிருந்தனர்.
வாகன ஓட்டுநரைத் தவிர, அதன் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் விபத்து நடந்த நேரத்தில் வாகனத்திற்குள் இருந்ததோடு, விபத்தின் பின்னர் இறங்கி ஓடியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், மீகொடை தன்சல் வரிசை விபத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியிருந்த கெப் வாகன உரிமையாளரும் மற்றைய நபரும் இன்று காலை சட்டத்தரணி ஒருவர் மூலமாக மீகொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதன்போதே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

