மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக 870 நபர்கள் பாதிப்பு!
மன்னார் மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 குடும்பங்களைச் சேர்ந்த 870 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
குறிப்பாக மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறித்த பாதிப்புகள் நிகழ்ந்துள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 161 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் இலுப்பைக்கடவை தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 11 கிராம அலுவலர் பிரிவுகளில் 284 குடும்பங்களைச் சேர்ந்த 709 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

