புத்தாண்டில் QR அறிமுகமாகும் விதம் குறித்து ஜனாதிபதி விளக்கம்
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் நிலவும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமானால், ஒரு நாடாக நாம் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குள் நுழைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சிறந்த கலாசாரத்தைக் கொண்டுள்ள எமது சமூகத்தில், இந்தப் புதிய முறைகளை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்ற சவால் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் கூறினார்.
QR என்று சொன்னாலே மக்களின் நினைவுக்கு வருவது எது?
எரிபொருளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி. QR ஊடாக உரம் வழங்கப்படவுள்ளதாகக் கூறியபோது, உரத்தையும் குறைக்கப் போகிறார்கள் என்ற ஒரு கருத்து உருவானது.
இவ்வாறு QR என்பது இறுதியாக கட்டுப்படுத்துதல் என்ற ஒன்றிற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. எனவே கொடுக்கல் வாங்கல்களுக்கும் இது கொண்டு வரப்படும் போது, இதுவும் ஒரு கட்டுப்பாடா என்று மக்கள் நினைக்கக்கூடும்.
அதனால் இது குறித்து ஒரு விசேட விழிப்புணர்வுத் திட்டம் அவசியமானது.
ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் எமது நாட்டில் QR குறியீடுகள் ஊடாக இடம்பெறும் அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களையும் மிக வேகமாகப் பிரபலப்படுத்த முடியும் என நாம் நம்புகிறோம்.
இது தொடர்பில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பல நிதி நிறுவனங்கள் இப்போது புத்தாண்டுக்கான விளம்பரங்களை உருவாக்கி வருகின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, புத்தாண்டு காலக் கொடுக்கல் வாங்கல்களை QR குறியீடுகள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களாக மாற்ற முடிந்தால், அது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையும்.
அப்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால் புதிய விடயங்கள் கவர்ச்சிகரமானதாகவோ அல்லது இலகுவானதாகவோ இல்லாவிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

