பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஹட்டன் – புலியாவத்தை பிரதான வீதியில் உள்ள பி.டபிள்யூ. பகுதியில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் நால்வரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சுமார் 10 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (04) பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நான்கு மாணவர்களும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
புலியாவத்தை பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு முச்சக்கர வண்டிக்கு இடமளிக்க முயன்றபோதே தனது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்ததாக அதன் சாரதி தெரிவித்துள்ளார்.
3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் பயிலும் மூன்று மாணவிகளும் ஒரு மாணவனும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

