நுவரெலியா நீர் வழங்கல் பிரிவை கையளிக்கும் முயற்சி: எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்து கடும் எதிர்ப்பு!
நுவரெலியா மாநகர சபையின் கீழ் இயங்கும் நீர் வழங்கல் பிரிவை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு கையளிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்தும் மலர்வளையம் ஏந்தியும் மாதாந்த சபைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.
இன்று (10) காலை மேயர் உபாலி வனிகசேகர தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாநகர சபைக்கு அதிக வருமானத்தைப் பெற்றுத்தரும் முக்கிய வளமான நீர் வழங்கல் பிரிவை கையளிப்பதன் மூலம் சபையின் எதிர்கால வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் மீது பொருளாதாரச் சுமை சுமத்தப்படும் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அழுத்தத்தினாலேயே மேயர் இந்நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
எதிர்ப்பை அடுத்து, இத்திட்டம் குறித்து உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கமளித்த பின்னரே அடுத்த சபைக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்படும் என மேயர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சபைக்கு வெளியே வந்த ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “நுவரெலியா மக்களின் இறுதிச் சடங்கு ஆரம்பமான நாள் இன்று” எனத் தெரிவித்ததுடன், சட்டவிரோதமாக இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நீதிமன்ற நிவாரணம் பெறவுள்ளதாகவும் எச்சரித்தனர்.

