நிலக்கரி விவகாரம் – எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிக்கை!

நிலக்கரி விவகாரம் – எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிக்கை!

நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைத் தோற்கடிக்க ஒன்றிணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தரமற்ற நிலக்கரியை டெண்டர் மூலம் கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த மோசடிகளை நிராகரித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனை மறைக்க தீவிரமாக முயற்சிக்கின்றது. எனினும், நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் அறிக்கை, பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தரவுகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் மூலம் இந்த ஊழல் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஊடாக நாட்டிற்கு ஏற்பட்ட நிதி நட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கரி அவசர கொள்முதல் தொடர்பான அண்மைய ஒலிப்பதிவு இந்த மோசடியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவு உண்மையானது என நிலக்கரி நிறுவனத் தலைவரே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும் நிலக்கரி கொள்முதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு செய்துள்ளது.

பிரபல தொழிலதிபர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்க தரப்பினருக்கும் இடையிலான இரகசிய கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பகுதியே இந்த நிலக்கரி ஊழல் என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் பில்லியன் கணக்கான நட்டத்தை மக்கள் மனதிலிருந்து மறைக்க அரசாங்கம் நாடகமாடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

இந்த ஊழலுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரும், அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் முழு அமைச்சரவையும் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடியைப் பாதுகாப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் 153 பிரதிநிதிகளும் மக்கள் நம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்திற்கு ஏற்படுத்திய நட்டத்திற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

manel