நாட்டின் வரி நிலுவை 2.1 டிரில்லியனாக உயர்வு: ஐ.எம்.எப் வெளிப்படுத்தல்

நாட்டின் வரி நிலுவை 2.1 டிரில்லியனாக உயர்வு: ஐ.எம்.எப் வெளிப்படுத்தல்

கடந்த 2025 ஆம் ஆண்டில், நாட்டின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கீழ் பதிவாகியுள்ள மொத்த வரி செலுத்தத் தவறிய தொகையானது சுமார் 2.1 டிரில்லியன் ரூபாவாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய தொழில்நுட்ப உதவி அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் குறிப்பிட்டுள்ளவாறு, அந்தத் தொகையில் சுமார் 1.6 டிரில்லியன் ரூபாய் வரி மதிப்பீடுகள் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்பட்ட தொகையும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நிலுவையிலுள்ள வரிப் பணத்தை அறவீடு செய்வதில் காணப்படும் மிகப்பெரிய தடையாக மேன்முறையீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் பதிவான மொத்த வரி செலுத்தத் தவறிய தொகை சுமார் 1.1 டிரில்லியன் ரூபாவாக இருந்ததுடன், அதில் சுமார் 947 பில்லியன் ரூபாய் இவ்வாறான சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்கு உட்படாத வரி நிலுவைகளும் கூட நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதாகவும், பணியாளர் பற்றாக்குறை, சரியான முன்னுரிமை அளிக்காமை மற்றும் அறவிடக்கூடிய வரி நிலுவைகள், அறவிடப்படும் சாத்தியக்கூறு குறைவாக உள்ள அல்லது நிர்வாகச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் அறவிடுவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற வரி நிலுவைகளைப் பிரித்தறிவதற்குத் தேவையான ஆபத்து அடிப்படையிலான முறைமை இல்லாமை ஆகியவையே அதில் தாக்கம் செலுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டத்தின் கீழ் அறவிட முடியாத வரி கடன்களை நேரடியாகத் நிராகரிப்பதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இல்லை என்பதுடன், அதற்கு நிதியமைச்சில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள சில வரி நிலுவைகள் தொடர்பாக, அவை மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில் கூட, அவற்றை அறவிடுவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையும் சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ளது.

இதன் காரணமாக, வரி நிலுவைகள் இருக்கும் காலம், அவை மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ளனவா, அறவிடும் திறன் மற்றும் அறவிடுவதற்குச் செலவாகும் நிர்வாகச் செலவு என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி, ஆபத்து அடிப்படையிலான வரி நிலுவை முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம் அறவிடக்கூடிய வரி நிலுவைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து, குறைந்த மதிப்பைக் கொண்ட, சர்ச்சைக்கு உட்பட்ட, அறவிடப்படும் சாத்தியக்கூறு குறைந்த அல்லது நிர்வாக ரீதியாக அறவிடுவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற வரி நிலுவைகளைத் தனித்தனியாக நிர்வகிக்க முடியும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

manel