சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விசேட பூஜை வழிபாடுகள்!

சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விசேட பூஜை வழிபாடுகள்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்றைய தினம் (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.  

ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரை, ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்த வரவேற்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுல சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் மற்றும் ஆலய நிர்வாக சபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளில் கலந்துகொண்ட அமைச்சர், அதனைத் தொடர்ந்து புனிதமிக்க அனுமான் பாதத்தை தரிசித்ததுடன், சீதா எலிய புனித கங்கையில் இறங்கி கங்கா தரிசனமும் செய்து கொண்டார்.

நிகழ்வின் நிறைவில், ஆலய நிர்வாக சபையினரால் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு சிறப்பு நினைவச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர் நிர்வாக சபையினருடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.  

மேலும், இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்ட உதவியின் கீழ் இராகலை பகுதியில் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளிகளும் இந்நிகழ்வில் நேரடியாக வருகை தந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்திய பிரதமருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

manel