சமரி அத்தபத்து தொடர்ந்து பத்தாவது இடத்தில்

சமரி அத்தபத்து தொடர்ந்து பத்தாவது இடத்தில்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான மகளிர் ஒருநாள் தரவரிசையில் ஸ்மிரித்தி மந்தனா முதல் இடத்தில் நீடிப்பதோடு இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து 10 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஐ.சி.சி. தரவரிசை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் பெற்ற டஸ்மின் பிரிட்ஸ் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 4 ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லிக் காட்னர் அதிரடியாக 7 இடங்கள் முன்னேறி 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கை வீராங்கனைகளில் ஹர்ஷிதா சமரவிக்ரமவினால் இரண்டு இடங்கள் முன்னேறி 20 ஆவது இடத்தையும் நிலக்ஷிகா சில்வாவினால் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 26 ஆவது இடத்தையும் பிடிக்க முடிந்துள்ளது.

மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் சொஃபி எக்லஸ்டன் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில் இலங்கை வீராங்கனை இனோக்கா ரணவீர 4 இடங்கள் ஏற்றம் கண்டு 24 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

எஸ். ரஜீவன்