கொட்டகலை லொக்கில் தோட்டத்தில் புதிய மர ஆலை அமைப்பதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

கொட்டகலை லொக்கில் தோட்டத்தில் புதிய மர ஆலை அமைப்பதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான லொக்கில் (Lochiel) தோட்டப் பகுதியில் புதிய மர ஆலை ஒன்று அமைப்பதற்கு எதிராக அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06.09.2026) கட்டுமானப் பகுதியில் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், எதிர்ப்ப வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதாதாங்கிகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவாக்கினர்.

குறிப்பிட்ட மர ஆலை அமைக்கப்படவுள்ள இடத்திற்கு அருகில் கிறிஸ்தவ தேவாலயம், தோட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் கோவில், தேயிலைக் கொழுந்து கொள்வனவு செய்யும் நிலையம் மற்றும் தோட்டத்திற்கான பிரதான வீதி ஆகிய கட்டமைப்புக்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மர ஆலை அமைக்கப்பட்டால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன், வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் வழிபாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும் எனத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன், பிரதான வீதிக்கு அருகில் இத்தொழிற்சாலை அமைவதால் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படும் என அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ஏற்கனவே அப்பகுதியில் அமைந்திருந்த தேயிலைச் செடிகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளதுடன், தேயிலை கொழுந்து கொள்வனவு மையக் கட்டடமும் இடிக்கப்பட்டு மர ஆலைக்கான முதற்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதிக மக்கள் நடமாட்டமும் வழிபாட்டுத் தலங்களும் அமைந்திருக்கும் சூழலில் இவ்வாறான மர ஆலையை நிறுவுவது பொருத்தமற்றது எனத் தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு வலியுறுத்துகின்றனர்.

manel