கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

வென்ச்சர் மேற்பிரிவில் சோகச் சம்பவம் – சாரதி கைது; இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ச்சர் மேற்பிரிவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வாகனத்தின் பின்புறத்திலிருந்து தவறி விழுந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

நோர்வூட்டிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வாகனத்தின் பின்புறத்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவி, எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த மாணவி உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்தவர் நோர்வூட் வென்ச்சர் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆரிஷ்னி எனவும், நோர்வூட் கல்லூரியில் தரம் 08 இல் கல்வி பயின்று வந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி இன்று (26) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மாணவி வாகனத்தின் பின்புறத்தில் பயணித்தமை மற்றும் அவர் வாகனத்திலிருந்து தவறி விழுந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

13 வயதுடைய பாடசாலை மாணவியின் திடீர் மரணம் வென்ச்சர் தோட்டப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

manel