குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியால் திடீர் வௌ்ளப்பெருக்கு அபாயம்!
குறுகிய காலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாவதால் திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆற்றோரங்கள் மற்றும் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், வீதிகளைப் பயன்படுத்துபவர்களும் தங்களுக்குக் கிடைக்கும் மழைவீழ்ச்சி குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டுமென திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள் குறித்து கடும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார,
“இன்று ஆறுகளின் நிலைமை மற்றும் மழைவீழ்ச்சியைக் கருத்திற்கொண்டால், குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைவீழ்ச்சியின்படி அம்பாறை மாவட்டத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 130 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஏனைய மழைவீழ்ச்சி பதிவான பகுதிகளைப் பார்த்தால், குறிப்பாக காலி, மாத்தறை மாவட்டங்களின் கிங்கங்கை மற்றும் நில்வளா கங்கை, அதேபோல் களுகங்கை, களனி கங்கை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்கள். மேலும் கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளிலும் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கையின் ஏனைய பெரும்பாலான பகுதிகளிலும் நேற்றைய தினம் சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. இன்றைய நாளிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எதிர்வுக்கூறலுடன் கூடிய குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
நில்வளா கங்கையின் கீழ் பகுதியில் தற்போது நீர்மட்டம் கிரமமாகக் குறைந்து வந்தாலும், (குறிப்பாக அக்குரஸ்ஸ, மாலிம்பட, கத்துவ போன்ற கீழ் பகுதிகளில்) தற்போதும் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலை காணப்படுகிறது. பெரிய அளவில் நீர்மட்டம் அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை. கிங்கங்கை, பத்தேகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு நிலை காணப்படுவதுடன், மேல் பகுதிகளில் நீர்மட்டங்கள் கிரமமாகக் குறைவடைந்து வருகின்றன. களுகங்கை, மில்லகந்த மற்றும் குடாகங்கை ஆகிய பகுதிகளை அண்மித்து சிறிய வெள்ளப்பெருக்கு நிலை காணப்படுவதுடன், களுத்துறையை அண்மித்த சில இடங்களில் சிறிய அளவில் நீர்மட்டம் அதிகரித்திருந்தாலும் பாரிய வெள்ளப்பெருக்கு நிலைமை வரை அது வளர்ச்சியடையவில்லை. களனி கங்கை நீர்மட்டங்கள் உயர் மட்டத்தில் காணப்பட்டாலும் கிரமமாகக் குறைவடைந்து வருகிறது. அத்தலுகலு ஓயா சிறிய வெள்ளப்பெருக்கு மட்டத்திற்கு அருகில் காணப்பட்டாலும் கிரமமாகக் குறைவடைந்து வருகிறது. மஹா ஓயாவில் (படல்கம உள்ளிட்ட பகுதிகளில்) சாதாரண அதிகரிப்பு காணப்பட்டாலும் வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு வளர்ச்சி அடைவதை அது காட்டவில்லை. மகாவலி கங்கை நாவலப்பிட்டி மற்றும் பேராதனை நீர்மட்டங்கள் ஆபத்தான மட்டத்திலிருக்கவில்லை.
எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் கடுமையான மழைவீழ்ச்சி கிடைப்பது (நேற்று அம்பாறையில் இரண்டு மணித்தியாலங்கள் போன்ற குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 130 மில்லிமீட்டர் மழை கிடைத்தது போன்றது) திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம். இதனால், குறிப்பாக ஆறுகளுக்கு அருகில் மற்றும் தாழ் நிலப் பிரதேசங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களும், வீதிகளைப் பயன்படுத்துவோரும் தங்களது பிரதேசங்களில் கிடைக்கும் மழைவீழ்ச்சிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் நாட்களிலும் குறிப்பிடத்தக்க பலத்த மழை பெய்யும் சாத்தியக்கூறு உள்ளதால், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.”என்றார்.

