எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்பு
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்புகளுக்காக எதியோப்பியா சென்றிருந்த போதே இந்த மூன்று இலங்கையர்களும் அங்கு கடத்தலுக்கு உள்ளாகியிருந்தனர்.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை தூதரகம் அங்குள்ள போலே (Bole) துணை நகர பொலிஸ் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, கடந்த மே 26ஆம் திகதி இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த மூன்று இலங்கையர்களும் எத்தியோப்பியாவை வந்தடைந்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட நுணுக்கமான அவதானிப்புகள் மற்றும் விசாரணைகளின் விளைவாக, சம்பந்தப்பட்ட இலங்கையர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற வாகனம் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, அவர்கள் எத்தியோப்பியாவின் ஒரோமியா (Oromia) பிராந்தியத்தில் உள்ள ஷஷெமேன் (Shashemene) நகரில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதற்கமைய நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த மூன்று இலங்கையர்களையும் வெற்றிகரமாக மீட்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சாமர்த்தியமாக செயற்பட்டதோடு, இச்சோதனையில் எதியோப்பிய நாட்டவர்கள் இருவர் மற்றும் பாகிஸ்தானியர்கள் நால்வர் உட்பட 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த இலங்கையர்களை விடுவிப்பதற்காக சந்தேக நபர்கள் ஒருவருக்கு 30,000 டொலர்கள் வீதம், மொத்தம் 90,000 டொலர்கள் பணத்தை கப்பமாகப் கோரியிருந்தனர்.
எத்தியோப்பிய தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு சேவை, பெடரல் பொலிஸார், தகவல் வலையமைப்பு பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் ஒரோமியா பிராந்திய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் மூலம் இந்த மூன்று இலங்கையர்களும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

