இன, மத பேதமின்றி நாடு முன்னேறும்; கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!
கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, நீண்டகாலமாக நிறைவு பெறாமல் முடங்கிக் கிடந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்தத் திட்டம் நிறைவு பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய வெற்றியாகும்.
மட்டக்களப்பு நூலக திறப்பு விழாவில் ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று, இந்த அரசாங்கம் இன, மத பேதமின்றி செயற்படும் ஒரு அரசாங்கமாகும். இந்த கலாசார மண்டபத்தின் ஊடாக இன, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளம் இடப்படுகிறது என்றார்.
மேலும், 30 வருடங்கள் நீடித்த யுத்தம் இனி இந்த நாட்டிற்குத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், கிழக்கு மாகாண மக்களே யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் என்றும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உண்மையான ஒற்றுமையின் ஊடாக மட்டுமே இந்த நாட்டை மேலும் முன்னோக்கி நகர்த்த முடியும் என்றும், அதற்கு அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

