ஹரினியிடம் கச்சதீவைக் கேளுங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

ஹரினியிடம் கச்சதீவைக் கேளுங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை பிரதமரை வலியுறுத்திட வேண்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது :-

இலங்கை பிரதமரின் மூன்று நாள் புதுடில்லிப் பயணம் ஒக்டோபர் 16–18, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இந்தப் பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள முதல் – அமைச்சர், 2021 முதல், 106 வெவ்வேறு சம்பவங்களில் 1,482 மீனவர்களும் 198 மீன்பிடிப் படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளைத் தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க இந்திய அரசின் தலையீட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரி வருவதாகவும், இதற்காக, தான் பதினொரு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதையும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எஸ். ரஜீவன்