வீட்டருகே வந்த சிறுத்தையால் திக்ஓயா பகுதியில் பரபரப்பு

வீட்டருகே வந்த சிறுத்தையால் திக்ஓயா பகுதியில் பரபரப்பு

திக்ஓயா, மணிக்வத்த பகுதியில் உள்ள வீடொன்றின் வெளிப்புற கொட்டகைக்கு அருகில் இன்று (12) அதிகாலை சிறுத்தையொன்று வந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டது.

காலை சுமார் 6.00 மணியளவில் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை, முன்னர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட காணியொன்றில் வளர்ந்திருந்த ரம்பைச் செடிகள் மற்றும் புற்களுக்கு இடையில் மறைந்திருந்தது.

நீண்ட நேரமாக எவ்வித அசைவும் இன்றி அந்த இடத்திலேயே சிறுத்தை இருந்ததால், வீட்டில் வசிப்பவர்களும் சுற்றுப்புற மக்களும் அச்சமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து பெருமளவான மக்கள் அங்கு திரண்டதுடன், சிறுத்தையை அங்கிருந்து விரட்டியடிக்கவும் முயன்றனர்.

மக்கள் பெருமளவில் ஒன்றுகூடியதால் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

அங்கு திரண்டிருந்த மக்களின் சத்தத்தினால் அச்சமடைந்த சிறுத்தை, முற்பகல் சுமார் 11.00 மணியளவில் அந்த இடத்திலிருந்து வெளியேறி, வீட்டுக்கு அருகிலிருந்த கால்வாய் பகுதியை நோக்கிச் சென்றதை காண முடிந்தது.

வனவிலங்கொன்று மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வந்துள்ள சந்தர்ப்பங்களில் அதனைச் சுற்றிவளைத்து அல்லது சத்தமிட்டு விரட்டுவதற்கு முயற்சிப்பது ஆபத்தானது என வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு சத்தமிட்டு விரட்ட முயற்சிப்பதால் விலங்கு அச்சமடைந்து பதற்றமடைந்து, மனிதர்களைத் தாக்கும் அபாயம் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து விலகி, பாதுகாப்பான தூரத்தில் இருப்பது மிகவும் முக்கியமானது என வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

திக்ஓயா பகுதி மக்கள் தெரிவிப்பதாவது, தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பையும் வனவிலங்குகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதாகும்.

manel