வலுசக்தி அமைச்சர் மேல்நீதிமன்றுக்கு வருகை
சக்திசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். வழக்கு ஒன்றின் நிமித்தம் அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் இலாபம் அல்லது சலுகையைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் கூறி, தற்போதைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
அக்காலப்பகுதியில் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் முகாமையாளராக அவர் பணியாற்றியுள்ளார்.
இதன்போது, உரக் கூட்டுத்தாபனத்தின் ஹுனுப்பிட்டிய களஞ்சிய வளாகத் தரையில் கார்பட் இடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் செயல்முறையில் காணப்பட்ட முறைகேடுகளே இந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணமாக அமைந்திருந்தது.
இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அந்த ஆணைக்குழு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

