வங்கி அட்டை மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்

வங்கி அட்டை மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை இன்று (24) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்பிமல் ரத்னாயக்க தலைமையில் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் ஆரம்பமானது. 

இங்கு பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதுடன், அது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 

அதற்கமைய, இன்றைய தினம் மாகும்புர – மாத்தறை, மாகும்புர – காலி, மாகும்புர – பதுளை, கொழும்பு – அம்பாறை ஆகிய அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளுக்காக வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பிமல் ரத்னாயக்க கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் இதற்கு சமாந்தரமாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பொரளையிலிருந்து கடவத்தை வரையும், அதேபோல ஊவா மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் பதுளை – பண்டாரவளை, தம்புள்ளை – மஹியங்கனை, மொனராகலை – பிபிலை மற்றும் மொனராகலை – வெல்லவாய ஆகியவற்றுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்காக வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

அத்துடன், நாளை (25) கொழும்பு – வவுனியா, கடவத்தை – மகரகம, மாகும்புர – தங்காலை மற்றும் மாகும்புர – அங்குனுகொலபெலஸ்ஸ வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்காக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எஸ். ரஜீவன்