மின்சார வாகன மின்கலங்களை அகற்றும் முறையில் கடும் குறைபாடு

மின்சார வாகன மின்கலங்களை அகற்றும் முறையில் கடும் குறைபாடு

நாட்டில் பயன்பாட்டிலிருந்து அகற்படும் மின்சார வாகனங்களின்  மின்கலங்களை முறைப்படி சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் அகற்றுவதற்கான போதுமான தேசிய முகாமைத்துவ முறைமை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, பயன்பாட்டிற்குப் பிந்தைய முகாமை மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு கணக்காய்வு அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கழிவு முகாமைத்துவ கொள்கையின் கீழ், பயன்பாட்டிலிருந்து அகற்படும் மின்சார வாகன மின்கலங்களை நிர்வகிக்கும் வேலைத்திட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்கலங்களைச் சேகரித்தல், மறுசுழற்சி செய்தல், அவற்றின் பயன்பாட்டுப் பாதையைக் கண்காணித்தல் மற்றும் சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவதற்கான ஒருங்கிணைந்த நிறுவன முறைமை நிறுவப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்கல முகாமையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகத் கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்காய்வின் போது மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட சில மினகலங்கள் திறந்தவெளிகளில் சேமித்து வைக்கப்படுவதும், பெரிய பைகளில் அடைத்து வைக்கப்படுவது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளால் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றாடலுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பயன்பாட்டிலிருந்து அகற்படும் மின்சார வாகன மின்கல முகாமை தொழில்துறையானது ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளதுடன், அதற்காக முறையான தேசிய மின்கல திரும்பப் பெறும் முறைமையோ அல்லது விரிவான கண்காணிப்பு அமைப்போ இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மின்கலங்களைச் சேமித்து வைப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் இல்லாததால், இத்தொழில்துறை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தற்காலிக வணிக ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே இயங்கி வருவதாகத் தணிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பயன்பாட்டிலிருந்து அகற்படும் மின்சார வாகன மின்கலங்களை பெருமளவில் அகற்றும் நிலையை இலங்கை இதுவரை அடையவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, 2026 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தின் மூலம் மின்கல முகாமை தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் பொறுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அச்சட்டப்பூர்வ ஏற்பாடுகளை நடைமுறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் விதிமுறைகள், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகளை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பயன்பாட்டிலிருந்து அகற்படும் லித்தியம்-அயன் (Lithium-ion) மின்கலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அபாயம் மேலும் கூடும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

manel