மருத்துவ பீடத்திற்கு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையே சிறந்த தெரிவு!

மருத்துவ பீடத்திற்கு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையே சிறந்த தெரிவு!

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமையப்பெறவுள்ள மருத்துவ பீடத்தினை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், சிலர் ஊடகங்களிலும் பொருத்தமில்லாத இடங்களில் அமைப்பதற்கான கருத்தினை தெரிவித்து வருகின்றார்கள். அக்கருத்துக்கள் யாவும் இப்பீடம் அமைவதற்கு பொருத்தமான இடமாகத் தென்படவில்லை என்று இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பி.கமால்தீன் – ஜனாதிபதிக்கும், உயர்கல்வி அமைச்சருக்கும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு வியாபார ஸ்தலம், உற்பத்திச்சாலைகள், கல்விக் கூடங்கள் பயிற்சி முகாம்கள் வைத்தியசாலைகள் எதுவாக இருந்தாலும் அந்த அமைவிடம் பொருத்தப்பாடு இல்லையாயின் அவற்றுக்குச் செலவிடப்படும் பணமும் அதற்கான முயற்சியும் தோல்வியைத் தரும் என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அமையுமாக இருந்தால் அது சிறந்த தெரிவாகும். தற்போது இக்கலாசாலையில் பயிற்சி பெறுவதற்கான ஆசிரியர்களில்லை. தற்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் யாவும் பட்டதாரிகளுக்கும், கல்விக் கல்லூரியில் பயிற்சி முடித்த டிப்ளோமாதாரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வளாகம் சுமார் 15 ஏக்கர் பரப்புடையதாகும். இதனை சுற்றிவளைத்து மதில் வேலிகளும் பாரிய விளையாட்டு மைதானம், விடுதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆராதணை மண்டபம், சமையலுக்கான கட்டிடம், உணவுச்சாலை, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி, பூந்தோட்டம், உட்பாதைகள் என்று அமையப்பெற்றுள்ளது. எனவே, இப்பீடம் அமைவதற்கான அடிப்படைத் தேவைகளில் அரைப்பகுதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றினால் இப்பீடம் அமைப்பதற்கு அரசிற்கு ஏற்படுகின்ற பாரிய செலவில் கணிசமான பணத்தொகையை குறைக்கலாம். மேலும் அண்மையில் அக்கரைப்பற்று வைத்தியசாலை சுமார் ½ கிலோ மீற்றர் எல்லைக்குள் அமைந்துள்ளது. இவ்வைத்திய மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு போதனா வைத்தியசாலையாகவும் பயன்படுத்தலாம் என்ற அறிக்கையையும், ஆலோசனையையும் ஜனாதிபதிக்கும், உயர் கல்வி அமைச்சருக்கும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

manel