போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குஎந்தவித மன்னிப்பும் இல்லை!

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குஎந்தவித மன்னிப்பும் இல்லை!

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எந்தவிதமான மன்னிப்பும் வழங்கத் தயாரில்லை என நீதிமன்ற மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 இரசாயனப் பரிசோதனை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைவான பதிலளிப்பை மேற்கொள்வதற்கும், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்குமான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (01) மஹர சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர், அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின்போது கைதிகளால் தீவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பிரதான சிறைச்சாலை அதிகாரி அலுவலகம், புனர்வாழ்வு பிரிவு, நெசவு பிரிவு உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.

மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த அமைச்சர், இரசாயனப் பரிசோதனை அறிக்கைகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக இரசாயனப் பரிசோதனை திணைக்களத்திற்கு தேவையான ஆட்சேர்ப்புகள் மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மாதத்தில் மட்டும் மஹர சிறைச்சாலையுடன் தொடர்புடைய 500 இரசாயனப் பரிசோதனை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடாமல், சமூகத்திற்கு பயனுள்ள நபர்களாக மாற முயற்சிக்குமாறு கைதிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“நீங்கள் எமது நாட்டின் உழைக்கும் சக்தி. நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பங்களிப்பது உங்கள் பொறுப்பு” எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும் போது பிரதேச மட்டத்தில் ஒருங்கிணைந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ், விமானப்படை, கடற்படை, தீயணைப்புப் படை, மின்சார சபை உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

manel