பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!

பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நேற்று (20) பெய்த பலத்த மழையால் மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகையும் வெள்ள அபாயத்தை எட்டியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக, அந்த பகுதிகளின் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது வினாடிக்கு 8,870 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இதன் காரணமாக, கலா ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை முன்னறிவிப்புகளின்படி, வரும் நாட்களில் கணிசமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், களனி ஆற்றுப் படுகையில் ஹங்வெல்ல மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேல் நீரோட்டப் பகுதிகளில் கணிசமான மழை பெய்தால், கீழ் நீரோட்டப் பகுதிகளில் துரிதமாக வெள்ளம் அபாயம் ஏற்படக்கூடும். 

இதே நேரத்தில், வரும் நாட்களில் கணிசமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், களனி, களு, மஹா ஓயா, தெதுரு ஓயா, கலா ஓயா போன்ற ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

manel