நுவரெலியா வாரச் சந்தை குப்பைக் கிடங்காக மாறியது!
சுற்றுலாப் பயணிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நுவரெலியா நகரின் சுகாதாரத்தையும் தூய்மையையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்ட நுவரெலியா மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள வாரச் சந்தை தற்போது குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறியுள்ளதுடன், அங்குள்ள கழிவறைக் கட்டமைப்பிலிருந்து கழிவுகள் வெளியேறி சந்தை வளாகம் முழுவதும் பரவுவதால் வியாபாரிகளும் நுகர்வோரும் கடுமையான சுகாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நுவரெலியா நகர எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள், பல்வேறு வகையான குப்பைகள், கட்டட நிர்மாணம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளிலிருந்து அகற்றப்படும் கட்டடக் கழிவுகள், வீதிப் புனரமைப்புப் பணிகளின்போது அகற்றப்படும் தார் கலந்த கழிவுகள் உள்ளிட்டவை வாரச் சந்தை வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் சந்தை வளாகத்தில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் விற்பனை நிலையங்களைச் சூழ்ந்துள்ள சூழலும் சுகாதாரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சந்தை வளாகத்திலுள்ள கழிவறைக் கட்டமைப்பின் கழிவுநீர்த் தொட்டிகள் நிரம்பி வழிவதால் மலக்கழிவுகள் சந்தை வளாகம் முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி சந்தைக்கு வருகை தரும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் இவ்வாறான சுகாதாரமற்ற நிலை காணப்படுவது பாரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாரச் சந்தை என்பது நகர மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வர்த்தக நிலையமாகும். எனவே, அதன் தூய்மை, கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவறை வசதிகளை முறையாகப் பராமரிப்பது மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்பாகும். எனினும், வியாபாரிகளிடமிருந்து கட்டணங்கள் அறவிடப்படும் இச்சந்தை இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தப் பிரச்சினை அண்மையில் உருவான ஒன்றல்ல. முந்தைய மாநகர சபை நிர்வாகக் காலங்களிலிருந்தே இவ்விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், தற்போதைய மாநகர சபை நிர்வாகம் பதவியேற்ற பின்னரும் சுமார் மூன்று தடவைகள் இப்பிரச்சினை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை நிரந்தரத் தீர்வொன்றை வழங்குவதற்கு நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை என வியாபாரிகளும் பிரதேச மக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நகரின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படும் நிலையில், அதே மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள வாரச் சந்தையே குப்பைகள் குவிக்கப்படும் இடமாக மாறியிருப்பது முரண்பாடான நிலைமையாகும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நகரின் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்காக தேசிய லொத்தர் சபையிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைச் சேகரிக்கும் கொள்கலன்களை மாநகர சபை பெற்றுக்கொண்டுள்ள பின்னணியிலும், அதன் நிர்வாகத்தின் கீழுள்ள சந்தை வளாகத்திலேயே இவ்வாறு கழிவுகள் குவிக்கப்படுவது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பில் நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேகரவிடம் தொலைபேசி மூலம் வினவியபோது, குறித்த காலப்பகுதியில் வாரச் சந்தை வளாகத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமது நிர்வாகமும் நுவரெலியா மாநகர சபையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குமாறு நாம் விடுத்த கோரிக்கையை மாநகர முதல்வர் நிராகரித்தார்.
இந்நிலையில், சந்தை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுதல், கழிவறைக் கட்டமைப்பு நிரம்பி வழிவதற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய முறையில் சீரமைத்தல், முழு வளாகத்தையும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரித்தல் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் முறையான கழிவு முகாமைத்துவத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் அவசியமாகியுள்ளது.
சுற்றுலா நகரமான நுவரெலியாவின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பது குறித்து பேசும் அதிகாரிகள், தமது நிர்வாகத்தின் கீழுள்ள வாரச் சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்கொள்ளும் இப்பிரச்சினையை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், பல தடவைகள் ஊடகங்கள் வாயிலாக இப்பிரச்சினை வெளிக்கொணரப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதமைக்கு மக்கள் தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
மற்றுமொரு ஊடக வெளிப்பாடு அல்லது பொதுமக்களின் எதிர்ப்பு உருவாகும் வரை காத்திருக்காமல், நுவரெலியா மாநகர சபை உடனடியாகத் தலையிட்டு இப்பாரிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

